Rock Fort Times
Online News

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பசுமை பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுங்கள்…* திருச்சி மாநகராட்சி ஆணையர் பொன்மணி வேண்டுகோள்!

நமது பாரம்பரியமிக்க தீபாவளிப் பண்டிகையை, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடுமாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்சி மாநகராட்சி பகுதிகளில், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் குறைந்த அளவு புகையும், ஒலியும் எழுப்பக்கூடிய “பசுமைப் பட்டாசுகளை” மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் முதியோர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை பணிகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சிறப்பாக கையாண்டு வருகிறார்கள். பொதுமக்கள் பட்டாசு வெடித்த பிறகு மீதமாகும் காகிதக் கழிவுகள் மற்றும் சாம்பலைத் தனியாகச் சேகரித்து வைக்க வேண்டும். அவற்றை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.
எரியும் குப்பைகளிலோ அல்லது வடிகால்களிலோ கொட்டக் கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு அருகிலும், மின் கம்பிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகிலும் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். இந்தத் தீபாவளியை ஒளியின் திருநாளாக மட்டுமின்றி, மாசில்லாத் திருநாளாகவும் கொண்டாடி, தூய்மையான மற்றும் பசுமையான மாநகரத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக்
கொள்கிறேன் இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்