தமிழகத்தில் தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுக கூட்டுச் சதிகளில் ஈடுபட்டுள்ளதாக, தவெக எம்.எல்.ஏ முஸ்தபா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைசந்தித்த அவர்,
“தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களை வாங்க குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றன. எனக்கே செல்போன் மூலம் அழைப்பு வந்தது. என்னைத் தொடர்பு கொண்டவர்கள், ‘முதலில் 15 கோடி ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்; சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம். அப்போது நீங்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களியுங்கள்; பின்னர் மீதி 15 கோடி ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்’ என 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசினர். இதுகுறித்து நான் தலைமையிடம் கூறியுள்ளேன். இனி திமுக, அதிமுகவால் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற முடியாது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க முயற்சிக்கின்றனர். இந்த வேலையில் முன்னர் திமுகவினர் ஈடுபட்ட நிலையில், தற்போது மதுரையைச் சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு, தவெக அரசைக் கவிழ்ப்பதற்குக் குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறார்.100 கோடி ரூபாய் வரை கொடுத்தால் கூட தவெக எம்.எல்.ஏ-க்கள் வரமாட்டார்கள். அடுத்த ஓரிரு நாட்களில் யார் இந்த குதிரைப் பேர கூட்டுச் சதியில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவரும்” என்று அவர் தெரிவித்தார்.

Comments are closed.