திருச்சியில் இருந்து புறப்பட்டது முதல்வர் விஜய்யின் வாகனம்… புதுக்கோட்டையில் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள்..!
பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகவும், நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதற்காக திருச்சியில் இருந்து புறப்படும் முதல்வர் ஜோசப் விஜய், திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக மண்டையூர், கீரனூர் மற்றும் கட்டியாவயல் வழியாகப் புதுக்கோட்டைக்குச் செல்கிறார். புதுக்கோட்டையில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரூ.23 கோடி மதிப்பிலான புதிய பேருந்து நிலையம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை முதல்வர் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறும் விழாவில், 104 பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஜோசப் விஜய் வழங்க உள்ளார். முதல்வரின் வருகையை முன்னிட்டு, அவர் பயணிக்கும் வழித்தடம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப் பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். வழிநெடுகிலும் பொம்மை யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பு வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் புதுக்கோட்டை மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
முதல்வரின் வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெற உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மோப்ப நாய்கள், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் சுமார் 4,850 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.