Rock Fort Times
Online News

தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14-ம் அணியின் கமாண்டன்ட் எம்.ஆனந்தனின் மகன் ஏ.பி. யுவின் ஆனந்த் தடகளப் போட்டியில் 2 தங்கம் வென்று அசத்தல்…!* முதல்வர் விஜய் பரிசு வழங்கி பாராட்டு!

41-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் அக்டோபர் 23 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது.14. 16, 18, 20 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் இருபாலருக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டியில்,20 வயதுக்குட்பட்டோருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருச்சி கல்லூரி மாணவர் ஏ.பி. யுவின் ஆனந்த் 1 நிமிடம் 54.24 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மேலும், இவர் போட்டியிட்ட 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாடு அணி முதலிடம் பெற்றது. இதன்மூலம் 2 தங்கப் பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு பரிசுக் கோப்பையை வழங்கி பாராட்டினார்.

விழாவில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் தடகள சங்க தலைவர் டி.கே.ராஜேந்திரன், துணைத் தலைவர் லீமாரோஸ் எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்து கொண்டனர். தடகள வீரர் ஏ.பி. யுவின் ஆனந்த் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். 2 தங்கப்பதக்கம் வென்ற மாணவர் யுவின் ஆனந்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவரது தந்தை எம்.ஆனந்தன் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14-ம் அணியின் கமாண்டன்டாக பழனியில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்