Rock Fort Times
Online News

துவரங்குறிச்சி சாலை விபத்தில் சிக்கிய ஈச்சேர் வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தல்… பொதுமக்கள் சுதாரிப்பால் வெட்ட வெளிச்சமானது..!

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்திலிருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று ( அக்டோபர் -26 ) அதிகாலை 1.30 மணி அளவில் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகேயுள்ள வலசுப்பட்டி என்னும் இடத்தில் பேருந்து சென்ற போது, முன்னாள் சென்றுகொண்டிருந்த ஈச்சர் வாகனம் திடீரென ட்ராக் மாறியதாக தெரிகிறது. இதனால், பின்னால் வந்த ஆம்னி பஸ், கண்ணிமைக்கும் நேரத்தில் ஈச்சேர் வாகனத்தின் பின்பகுதியில் மோதியது. இதில் தனியார் பேருந்து க்ளீனர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவ்விபத்தில் சிக்கி காயமடைந்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையிலும், அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விபத்தில் சிக்கிய ஈச்சேர் வாகனத்தில் பல டன் எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பேருந்து மோதிய வேகத்தில் ஈச்சேர் வாகனத்தின் பகுதி சேதமடைந்துள்ளது. இதிலிருந்து அரிசி மூட்டைகள் சாலையில் விழுந்துள்ளது. ஆனால் ஈச்சேர் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரும் க்ளீனரும் இதை கண்டுகொள்ளாமல் உடனடியாக அப்பகுதியிலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், சாலையில் விழுந்து கிடந்த அரிசி மூட்டைகளை பார்த்தபோது, அவை அனைத்தும் ரேசன் அரிசி என்பதும், திருட்டுத்தனமாக கள்ள சந்தையில் விற்பதற்காக சீனி மூட்டைகளிலும், சாக்கூப்பைகளிலும் கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. விபத்து நடைபெற்ற இடத்திற்கு மீட்புப் பணிகளுக்காக வந்த மணப்பாறை த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கதிரவனிடம் கடத்தல் ரேசன் அரிசி குறித்து தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக அவர் இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் வெங்கட ரமணன் மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ரமேஷ் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். ரேசன் அரிசி கடத்தப்பட்ட ஈச்சேர் வாகனத்தின் பதிவு எண் மதுரையை சேர்ந்ததாக இருப்பதால், போலீசாரும்,
துறை சார்ந்த அதிகாரிகளும் இதற்கான விசாரணையை தொடங்கியுள்ளதோடு கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்