Rock Fort Times
Online News

மாப்பிள்ளை மீரானுக்கு காப்பு..! வக்கீல் போர்வையில் உலா வந்த லாட்டரி மெகா மாஃபியா…* தட்டித்தூக்கிய திருச்சி மண்டல போலீஸ்..!

லாட்டரி… கண்ணுக்குத் தெரியாத ஒரு கரன்சி போதை. வெயிலிலும், மழையிலும் தூசு, புகையிலும் நாள் முழுவதும் பாடுபட்டு சிறுக சிறுக சேர்த்துவைத்த ஏழை, எளிய மக்களின் காசு பணத்தை, கவர்ச்சி வலை விரித்து கொள்ளை கொள்ளும் மாயாஜாலக்கூடம். தமிழகத்தில் இதனால் பாதிக்கப்பட்ட எத்தனையோ குடும்பங்கள் வீடு, வாசல் இழந்து நடுத்தெருவுக்கு வந்ததை நாடே அறியும். அதனால்தான், கடந்த 2003ம் ஆண்டில் தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு முழுமையான தடைவிதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், தற்போது வரை கொள்ளை லாபத்திற்கு ஆசைப்படும் சில மாஃபியா கூட்டம், தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து, அரசுக்குத் தெரியாமல் கள்ளத்தனமாக திருட்டு லாட்டரி விற்று ஊரை அடித்து உலையில் போடும் வேலையை பாத்துக் கொண்டுதான் வருகிறது. அப்படி திருச்சி மாநகரில் பல ஆண்டுகளாக போலீசுக்கே டிமிக்கி கொடுத்து செயல்பட்டு வந்த வக்கீல் மாப்பிள்ளை மீரான் தலைமையிலான மெகா லாட்டரி நெட்வொர்க்கை, ஒட்டுமொத்தமாக கைது செய்து திருச்சி மண்டல காவல்துறை அதிரடி ஆக்‌ஷன் எடுத்துள்ளது.

திருச்சி மண்டலத்தில் திருட்டு லாட்டரி விற்பனையை தடுக்கவும், லாட்டரி மாஃபியா கூட்டத்தை அடியோடு வேறறுக்கவும் திருச்சி மண்டல ஐ.ஜி மற்றும் டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ரகசிய ஆபரேஷன் ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் யார், யார் லாட்டரி விற்பனை செய்து வருகிறார்கள்? எங்கெங்கு லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது?பின்னணியில் இருந்து இவர்களை இயக்குவது யார்? என ஒட்டுமொத்த விபரமும் தனிப்படை போலீசாரால் சைலண்டாக சேகரிக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், பக்காவாக ஸ்கெட்ச் போட்ட போலீசார் திருச்சி, வயலூர் ரோடு, சண்முகா நகர் பகுதியில் ஒரு வீட்டில் வைத்து சொந்தமாக லாட்டரி சீட்டுகளை தயாரித்து, திருட்டுத்தனமாக விற்றுவந்த கும்பலை தட்டித் தூக்கியுள்ளது. மேலும், அங்கு லாட்டரி சீட்டுகளை பிரிண்ட் செய்ய பயன்படுத்தப்பட்ட பிரிண்டர், செல்போன்,சிம் கார்டுகள், லாட்டரி வினியோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ என அனைத்தையும் கைப்பற்றியதோடு, இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் உட்பட இருவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை செய்துள்ளனர். அப்போது கைது செய்யப்பட்டவர்களின் செல்போனை ஆராய்ந்தபோது, இந்த லாட்டரி கூட்டத்திற்கு பின்னணியில் வழக்கறிஞரான மாப்பிள்ளை மீரான் என்பவர் தான், பல ஆண்டுகளாக மிக முக்கிய மூளையாக இருப்பதும்,
சட்டவிரோத லாட்டரி கூட்டத்திற்கு இடையே பணப்பரிவர்த்தனை செய்து வந்ததும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக திருச்சி, பெட்டவாய்த்தலையில் உள்ள மாப்பிள்ளை மீரான் வீட்டுக்குச்சென்ற தனிப்படையினர், இரவோடு இரவாக அவரை கைது செய்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததோடு ஜாமினில் வெளிவர முடியாதபடி பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். கருப்பு, வெள்ளை உடையணிந்து குற்றச்
செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரும் கண்ணியமிக்கது வழக்கறிஞர் பணி. சமூகத்தில் பெரும் மதிப்பும், மரியாதையும் கொண்ட வழக்கறிஞர் பணிக்கே கறைபடியும் அளவிற்கு திருட்டுத்தனமாக லாட்டரி அடித்து, ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து பிழைக்கும் மாபாதக செயலை செய்து, தற்போது திருச்சி மண்டல காவல்துறையால் காப்பு மாட்டப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் மாப்பிள்ளை மீரானை சட்டப்படி கடுமையாக தண்டிப்பதோடு, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் இருந்து அவரது பெயரை நீக்கி, மீண்டும் வழக்கறிஞர் பணி செய்யாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்