Rock Fort Times
Online News

திருச்சி சிட்டி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்… மாநகராட்சி ஆணையர் பொன்மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு…!

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படாமல் தடுப்பதற்காக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சிக்கு உட்பட்ட 3வது மண்டலம், 35-வது வாா்டு, சங்கிலியாண்டபுரம் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி ஐஏஎஸ் இன்று (20.10.2026) நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த பணிகள் குறித்து அவர் கூறுகையில்,

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், டெங்கு மற்றும் பிற கொசுக்களால் பரவும் நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநகராட்சி 65 வார்டு முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து ஒழிப்பதற்காக, ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 60 கொசு ஒழிப்பு கண்காணிப்பாளர்கள் (DBC) பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பருவமழை தொடங்கியதையடுத்து, தடுப்பு நடவடிக்கையை வலுப்படுத்த ஒவ்வொரு மண்டலத்திலும் கூடுதலாக 20 டெங்கு தடுப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியை தடுக்கும் விதமாக, டெங்கு புழு உருவாக ஏதுவான நீராதாரங்களை கண்டறிந்து அழிக்கவும், வீடுகள் தோறும் காய்ச்சல் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மாநகராட்சியில் மொத்தம் 350 டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளா்கள் வீடு,வீடாக சென்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், மாநகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும். சாலை பகுதிகள், பொது இடங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது. மீறி குப்பைகள் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும்,
திருச்சி மாநகரை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்