Rock Fort Times
Online News

சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து முதல்-அமைச்சர் விஜய் மரியாதை…!

அக்டோபர் 21ம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959ம் ஆண்டு இதே நாளில் (21ம் தேதி) லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில் காவலர் வீரவணக்க நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் பணியின் போது மரணம் அடைந்த தமிழ்நாடு காவல் துறையை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இந்தியாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் வீர மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஓராண்டில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், இன்று(21-10-2026) டிஜிபி அலுவலகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து டிஜிபி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் டிஜிபி அலுவலக வளாகத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் மரக்கன்று நட்டு வைத்தார்.

உன்னதப் பணிகளை போற்றிடுவோம் :

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டிருந்த சமுக வலைதளப் பதிவில், “1959-ம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைப் போற்றும் காவலர் வீரவணக்க நாளில் நாட்டில் அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் நிலைநாட்டும் உயரிய கடமையில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த காவல் துறையினர் அனைவருக்கும் வீர வணக்கங்கள்! இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், குற்றச் சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்கள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு துணிவுடனும், விழிப்புடனும் பணியாற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. கடமையின் பாதையில் இன்னுயிர் நீந்து, அமரர்ககளான தியாகிகளுக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துவதோடு காலநேரம் கருதாமல் அயராது உழைத்து நாட்டின் அரணாகத் திகழும் காவல் துறையினரின் உன்னதப் பணிகளைப் போற்றிடுவோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்