நடந்து முடிந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்தியபாமா. அதிமுக தலைமை மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் ராஜினாமா செய்ததற்கு ‘குதிரை பேரம்’ முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. இந்த தொகுதியில் சத்திய பாமாவிற்கே தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வாய்ப்பு வழங்கினார். அவர் ராஜினாமா செய்தது முதல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, தேர்தல் பிரச்சாரம் வரை பல்வேறு சோதனைகளை சந்தித்தார். ‘குதிரை பேரம்’ மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் என்று அதிமுக வசை பாடியது. தேர்தல் பிரச்சாரத்தில் துரோகி, துரோகி என அதிமுகவினர் அவரை பிரச்சாரம் செய்ய விடாமல் பல இடங்களில் தடுத்தனர். தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரை ‘பெட்டி பாமா’ என்றும், ‘பல்டி பாமா என்றும் உருவ கேலி செய்தார். இவ்வாறு பல்வேறு அவமானங்களையும், சோதனைகளையும், வேதனைகளையும் அவர் சந்திக்க நேரிட்டது. தாராபுரம் தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் விஜய் வந்த போது, பெண் என்றும் பாராமல் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி கதறி அழுதார். அவரை முதல்வர் விஜய் தேற்றினார்.
இந்தநிலையில் தேர்தல் முடிவுகள் இன்று(09-10-2026) அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் இரண்டு சுற்றுகள் சத்தியபாமா பின்தங்கியே இருந்தார். அதிமுகவின் ‘கை’ ஓங்கி இருந்தது. ஆனால், ஐந்தாவது மற்றும் அதற்கு அடுத்த சுற்றுகளில் சத்தியபாமா முந்தத் தொடங்கினார். இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட அவர், தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுக்களிலும் முன்னிலை பெற்றார். தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் முழுமையான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று, 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். தாராபுரம் என்பது அதிமுக கோட்டையாக கருதப்படுகிறது. அந்த கோட்டையை முதல்முறையாக உடைத்து தமிழக வெற்றிக்கழகம் வாகை சூடி இருக்கிறது.

Comments are closed.