திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மானூர் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இத்தகைய சூழலில் காலாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறக்கப்பட்டது. அப்போது குடிநீர்த் தொட்டியின் குழாய் உடைக்கப்பட்டு, அதற்குள் மனித கழிவு கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினரும், கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பள்ளி விடுமுறை நாளில் சில இளைஞர்கள் அத்துமீறி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து மது அருந்தியதாகவும், அவர்களுக்கும் இந்தச் செயலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர். அதே சமயம் தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்த விஷயத்தைத் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் மறைத்ததாகவும் பொதுமக்கள் குற்றச் சாட்டியுள்ளனர். மற்றொருபுறம் இந்த சம்பவத்தைக் கண்டித்தும், இதற்குக் காரணமான சமூக விரோதிகள் மீது கடுமையான போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்களின் பெற்றோர்களும், அப்பகுதி பொதுமக்களும் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளியைக் கண்டுபிடிக்கக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.