திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வடக்கு சேர்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 45). விவசாயி. இவரது மனைவி லட்சுமி ( 40).
கருப்பையா, பூலாங்குளத்துப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மனைவியுடன் சென்று விட்டு
மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கரையாம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த சொகுசு கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதுடன் சாலையோர 20 அடி பள்ளத்தில் இறங்கி நின்றது. கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பையா மற்றும் லட்சுமியின் உறவினர்கள் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு குவிந்து விபத்திற்கு காரணமான கார் ஓட்டுனரை கைது
செய்யக்கோரி மணப்பாறை – புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர். சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைய ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.