அந்த வீடியோவில் இருப்பது என்னுடைய ‘வாய்ஸ்’ அல்ல… எதிர்க்கட்சிகளின் சதி… * தாராபுரம் த.வெ.க.வேட்பாளர் சத்தியபாமா பரபரப்பு பேட்டி..! (வீடியோ இணைப்பு)
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் இன்று(06-10-2026) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் மாலையில் ஒரு பரபரப்பான வீடியோ வெளியாகியது. அந்த வீடியோவில், தாராபுரத்தில் த.வெ.க. சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா பேசியதாகக் கூறப்படும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அந்த வீடியோவில், “கடந்த தேர்தலின் போது நான் 31 கோடி ரூபாய் செலவு செய்தேன். எடப்பாடி பழனிசாமி எனக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் நான் த.வெ.க-வில் இணைந்திருக்கிறேன், இங்கு சாப்பாட்டுக்காகவும், தங்குமிடத்துக்காகவும் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளேன்” என்று சத்தியபாமா பேசுவது போன்ற குரல் பதிவுகள் பதிவாகியிருந்தன.
இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மடுகம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்திய பின்னர் தவெக வேட்பாளர் சத்யபாமா செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், “எதுவும் உண்மையில்லை; அது முற்றிலும் சித்தரிக்கப்பட்ட வீடியோ. ஆரம்பத்திலிருந்தே அனைத்துமே திட்டமிட்டுச் சித்தரிக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த நாடகம் எந்த வகையிலும் உண்மையானது கிடையாது. யார் இதைச் செய்கிறார்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். நம்முடைய தாராபுரம் தொகுதியில் த.வெ.க.வெற்றி உறுதியாகிவிட்ட காரணத்தினால்தான், இதுபோன்ற மட்டமான தந்திரங்களையும், அவதூறு வீடியோக்களையும் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்” என்றார். தேர்தல் நேரத்தில் வேட்பாளர் ஒருவரைக் குறிவைத்து வெளியாகியுள்ள இந்த வைரல் வீடியோவும், அதற்கு அவர் அளித்துள்ள அதிரடி விளக்கமும் அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Comments are closed.