பருப்பு விலை குறைப்புக்கு காரணம், தவெக அரசு அல்ல, முந்தைய திமுக அரசு தான்…* புள்ளி விவரங்களுடன் உதயநிதி விளக்கம்!
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதன் மூலம், தவெக அரசு மூன்று மாதங்களில் சுமார் ரூ.187 கோடி சேமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, முந்தைய அரசு கொள்முதல் விலையை விட கிலோவுக்கு ரூ.31 குறைவாக துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திமுக ஆட்சியில் கிலோ ரூ.109-க்கு கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த அரசு,ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும், இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு
187 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் – உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் டூல்கிட்ஸ் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், தவெக அரசு அல்ல, முந்தைய திமுக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை. 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது திமுக அரசு. இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று திமுகவின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது. அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், திமுக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர். திமுக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.
விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.