Rock Fort Times
Online News

‘மகனுக்காக தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை… பின்னணி என்ன?

சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை, இன்று(30-09-2026) தாராபுரத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதோடு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், இந்நாள், முன்னாள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அந்தவகையில் முன்னாள் அமைச்சர்
செம்மலையும் கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்தார். ‘கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா…மனசு நோகுதய்யா…’ என வேதனைப்பட்டு அறிக்கை வெளியிட்டதோடு அதிமுகவிலிருந்து விலகினார். அதன்பிறகு சில வாரங்கள் நிம்மதியாக அமெரிக்காவில் தங்கியிருந்தார். ‘இனிமே அரசியல்ல ஈடுபடுற ஆர்வமெல்லாம் இல்லங்க…’ என்றே நெருங்கியவர்களிடமும் பகிர்ந்திருக்கிறார். ஆனால், செம்மலையின் மகனுக்கு தவெகவில் இணைய வேண்டுமென விருப்பம். அதற்காக அவர் சிலர் மூலம் தூதுவிட்டும் பார்த்திருக்கிறார். சேலத்து அமைச்சரான பார்த்திபனை அடிக்கடி சந்தித்து கட்சியில் இணைவதைப் பற்றி பேசியிருக்கிறார். ஆனால், தவெக தலைமை செம்மலையின் மகனை மட்டும் கட்சியில் இணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. செம்மலையோடு வந்தால் எம்.ஜி.ஆர் காலத்து அதிமுகக்காரர் விஜய்யை இன்னொரு எம்.ஜி.ஆராக பார்த்து கட்சியில் இணைகிறார் என்கிற இமேஜை உண்டாக்கலாம் என நினைக்கிறது. செம்மலைக்கு இதில் உடன்பாடில்லை. ஒருவேளை செம்மலை இன்று தவெகவில் இணைந்தால், அது மகனின் விருப்பத்துக்காகவும் எதிர்காலத்துக்காகவும் மட்டுமே இருக்கும்’ என்றனர். இடைத்தேர்தல் சமயத்தில் செம்மலை தவெகவில் இணைந்தால் தாராபுரத்தில் சமூகரீதியாக சில கணக்குகள் தங்களுக்கு சாதகமாக மாறும் என தவெக தலைமை நம்புகிறது. சமூகக் கணக்குகளை மனதில் வைத்துதான் சமீபத்தில் அதிமுகவிலிருந்து வந்த மடத்துக்குளம் மகேந்திரனுக்கும் மாவட்டச் செயலாளர் பதவியை கொடுத்திருந்தனர். செம்மலையை வைத்து தவெக ஒரு கணக்கு போடுகிறது. செம்மலை என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது விரைவில் தெரிந்து விடும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்