Rock Fort Times
Online News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி வசூலித்து மோசடி: பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து…!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பிடி அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிடி அரசகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை காவல் ஆணையர், ஜூலை 11ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி
பிடி அரசகுமாரின் மனைவி கோகிலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 2024-25ம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு, 2026 ஆம் ஆண்டு வழக்குபப்திவு செய்து, கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாகவும், இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை எனவும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது பிடி அரசகுமார் மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், கட்சி நிதி என்ற பெயரில் பி.டி.அரசகுமார் பணம் வசூலித்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. அதற்கு ஆதாரங்கள் இல்லை. தொடர் குற்றத்தில் ஈடுபடுபவர்களை மட்டுமே குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க முடியும் என்ற விதிக்கு எதிராக இது அமைந்துள்ளது. எனவே, அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இந்த வழக்கு இன்று(28-09-2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசகுமார் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்