Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் மின் கணக்கீட்டாளர் பணியிடங்கள் தனியார் மயமாகிறது…* அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

தமிழ்நாட்டில் மின் கணக்கீட்டாளர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ள நிலையில், மின் பயன்பாட்டைக் கணக்கிடும் பணியை அடுத்த 6 மாதங்களுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் முடிவு செய்துள்ளது. அக்டோபர் முதல் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒப்பந்தப் பணியாளர்களுக்கு வழங்கப்படும். மீதித் தொகை தனியார் நிறுவனங்களுக்கு செல்வது உழைப்புச் சுரண்டலாகும். ஒப்பந்தப் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை. இதன் காரணமாகப் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், ‘ஆள் பற்றாக்குறை’ என்ற காரணத்தைக் கூறித் தனியார் ஒப்பந்த முறைக்குச் செல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காலியாக உள்ள கணக்கீட்டாளர் பணியிடங்களை முறையான நேரடித் தேர்வுகள் மூலம் அரசே நிரந்தரமாக நிரப்பிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கனவே மின் கணக்கீட்டுக் குளறுபடிகளாலும் தாமதங்களாலும் மின்கட்டணம் அதிகரிப்பதாகப் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தனியார் மயமாக்குவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்