Rock Fort Times
Online News

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை யொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்… * நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்..!

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும், இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நம்பெருமாளை வழிபட்டால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். அந்தவகையில் கடந்த முதலாவது புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாள் கோவில்களில் கூட்டம் அலைமோதியது. அதேபோல இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமையான இன்று(26-09-2026) 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் மேலும் அதிகரித்தது. பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நம்பெருமாளை பயபக்தியுடன் தரிசித்தனர். மேலும் சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர் சன்னதி, தாயார் சன்னதியில் எள், நெய் விளக்கிட்டும் மற்றும் அணையா விளக்கில் தாங்கள் கொண்டுவந்த நெய்யை ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். வரிசையில் நிற்கும் வயதான பக்தர்கள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் வெண்பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகையையொட்டி கூட்டநெரிசலின்றி வழிபாடு செய்வதற்காக ஆலய நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதேபோல பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்