தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடந்த 10ம் தேதி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.
இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர கீர்த்தனா
தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதால் தான் லண்டன் செல்ல முடியவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில், காலை உணவு விரிவாக்க தொடக்க விழாவின் போது அமைச்சர் கீர்த்தனா, பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.
இது தொடர்பான புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒருவரால் எப்படி சாப்பாடு வாளியின் மூலம் உணவை பரிமாற முடிகிறது என அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கேள்விகள் எழுப்பினர்.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைச்சர் கீர்த்தனா எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “10ம் தேதி காலர்போன் தட்டை அகற்றும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஓய்வு எடுத்தேன். அதன் பின்னர் எனது பணிகளைத் தொடர்ந்து வருகிறேன். கடினமான பொருட்களைத் தூக்க வேண்டாம் என்று மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார். ஆனாலும், கடந்த 22ம் தேதி காலை உணவுத் திட்டத்தின் போது அந்தச் சில நொடிகள் ஒரு குழந்தைக்கு நானே நேரில் உணவை பரிமாற விரும்பினேன். நான் ஒருபோதும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. விரைவில் குணமடையுங்கள் என்று யாரும் ட்வீட் செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை. எனது அர்ப்பணிப்பைப் பாராட்டுமாறு யாரிடமும் கேட்கவில்லை. நான் மீண்டும் எனது பணிகளைத் தொடர்ந்தேன். ஏனெனில், அதுதான் எனது பணி. அந்த வலிமை என் அம்மா, அப்பா மற்றும் என் அண்ணன் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோரிடமிருந்துதான் எனக்குக் கிடைத்தது.
பொறுப்புணர்வு, மன உறுதி மற்றும் ஒருபோதும் தளராமல் இருத்தல் ஆகியவற்றை அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். மேலும், எனது உடல்நிலை குறித்து கேலி செய்தவர்கள் தயவுசெய்து என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம். ஒரு பெண்ணின் உடல்நிலையைக் கேலி செய்வதில் பெருமை கொள்ள ஏதுமில்லை. அறுவை சிகிச்சை குறித்து உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், கட்டுப் பிரிக்கும் மற்றும் தையல் அகற்றும் தேதியை நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நீங்களே நேரில் வந்து அதைப் பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.