Rock Fort Times
Online News

மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்…* தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. அவசர புகார்..!

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் விநியோகிக்கப்படுவதாகக் கூறி, அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அவசரப் புகார் அளித்துள்ளார். மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், தாராபுரம் தொகுதியிலும் வாக்காளர்களுக்கு சட்ட விரோதமாகப் பணம் வழங்கப்படுவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 123(1)-ன் கீழ் லஞ்சமாகக் கருதப்படும் என்றும், பாரதிய நியாய சன்ஹிதா விதிகளின்படியும் நடவடிக்கை எடுக்கக்கூடிய குற்றம் என்றும் அ.தி.மு.க. தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இரு தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மூலம் உடனடியாகத் தீவிர கள ஆய்வு நடத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள், தொலைக்காட்சி செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி ஆதாரங்களைப் பாதுகாத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரச் செலவுகள் வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம்
வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்