Rock Fort Times
Online News

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்…!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2026-2027-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டும், 6-ந்தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் பின்னர், பட்ஜெட் மீதான விவாதமும், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்றன. இந்த விவாதத்துக்கு அந்தந்த துறையை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். செப். 8-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டத்தில், மாநிலத்தில் உலகத் தரத்திலான தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதை எளிதாக்கும் வகையில், அவற்றுக்கான குறைந்தபட்ச நிலத் தேவையை 100 ஏக்கரில் இருந்து மண்டலங்களுக்கு ஏற்ப (சென்னையில் 12 ஏக்கர், பிற மாநகராட்சிகளில் 18 ஏக்கர், இதர பகுதிகளில் 25 ஏக்கர்) குறைக்கவும், நிரந்தர வைப்பு நிதியை ரூ.50 கோடியில் இருந்து ரூ.25 கோடியாக குறைக்கவும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் பணிகள்) திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்த மசோதா, ஊராட்சிகள் 2-ம் சட்ட திருத்த மசோதா, வணிக எளிதாக்கல் திருத்த மசோதா, மதிப்புக்கூட்டு வரி திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மொத்தமாக நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டசபையில் அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் எதிர்ப்பை சந்தித்த நகர் ஊரமைப்பு மசோதா, எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது, டாஸ்மாக் மதுபானங்களுக்கு மதிப்பு கூட்டு வரி விதிக்கும் மசோதாவிற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள், தற்போது சட்டங்களாகி விட்டன. அவை அனைத்தும் செப்டம்பர் 15-ந்தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்