விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 14-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரயில் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு;
சென்னை சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு ரயில் (06023) வருகிற செப்டம்பர் 11-ம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், போத்தனூர் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06024), செப்டம்பர் 14-ம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தாம்பரம் – தென்காசி சிறப்பு ரயில் (06089), வருகிற செப்டம்பர் 11-ம் தேதி இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.15 மணிக்கு தென்காசி சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில் (06090), செப்டம்பர் 14-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப்டம்பர் 10) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்,
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று (10ம் தேதி) 585 பேருந்துகளும் நாளை (11ம் தேதி) 1255 பேருந்துகளும், வரும் 12ம் தேதி 1030 பேருந்துகளும், 13ம் தேதி 650 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு நாளை (11ம் தேதி) 240 பேருந்துகளும், வரும் 12ம் தேதி 240 பேருந்துகளும், 13ம் தேதி 105 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாதவரத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் www.tnstc.in மற்றும் டி.என்.எஸ்.டி.சி மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Comments are closed.