திமுக எம்.எல்.ஏ.க்களால் மருத்துவர் இல்லாமலேயே எனக்கு சிகிச்சை கிடைத்தது…* சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்…!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவல்துறை, மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்களின் மீது முதல்வர் விஜய் நேற்று (07-09-2026) பதிலுரை அளித்தார். அப்போது முதல்வர் விஜய், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்க அனுமதி கோரிய நிலையில் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார். இதனால் திமுகவினர் நேற்று அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்றும், முதல்வர் நேற்று பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் இருக்கை முன்பாக திமுகவினர் திரண்டு கோஷமிட்டனர்.
இதையடுத்து திமுக உறுப்பினர்களை பேரவையிலிருந்து வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேசுகையில், திமுகவினர் நேற்றும் இத்தகைய முயற்சியில்தான் ஈடுபட்டார்கள் என்பதை உலகம் அறியும். அனைத்து மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யார், யாருக்கு எந்தெந்த கட்சிகள் என்னென்ன பயிற்சி அளிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மனவேதனையாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். குறைந்த ரத்த அழுத்தம் எனக் கூறி, மருத்துவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார். அதையும் மீறி நம்மை ஆளாக்கி அழகுபார்த்த முதல்வர் உரையைப் பார்க்க வேண்டும் என நான் இங்கு வந்து அமர்ந்தேன். நல்ல வேளையாக அவர்கள்( திமுக) நடந்துகொண்ட விதத்தில் மருத்துவர் இல்லாமலேயே எனக்கு சிகிச்சை கிடைத்தது. எனது ரத்த அழுத்தம் எல்லாம் ஏறிவிட்டது. இப்போதும் என்மீது என்ன தவறு இருக்க முடியும் என நினைத்து பாருங்கள். முதல்வர் பேசியதை நீக்க கோரிக்கை வைத்தார்கள். ஆனால், நீக்க முடியாது என தெளிவாக நான் கூறிவிட்டேன். விதிகளுக்கு உட்பட்டு ஆதாரத்துடன்தான் முதல்வர் பேசினார். மூத்த முன்னாள் அமைச்சர்கள், பேரவையை எப்படி மாண்புடன் நடத்த முடியும் என நன்கு அறிந்தவர்களை கொண்ட கட்சியினர், அவையை நடத்தவிடாமல் தடுத்தால் என்ன செய்ய முடியும்?” எனத் தெரிவித்தார்.

Comments are closed.