தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கடந்த ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவது குறித்து முதலமைச்சர் அறிவித்தார். இதுகுறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, “110 விதியின்கீழ் அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிப்பது வழக்கம். ஆனால் வழக்குகளை ரத்து செய்வது குறித்து அறிவிப்பது இதுவரை வழக்கத்தில் இல்லை. முந்தைய அரசு போராட்டங்களின்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறும்போது தற்போது பிரச்சினை எழுகிறது” என்றார். அதற்கு சபாநாயகர், “வழக்குகள் போடப்படவில்லையா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த எ.வ. வேலு, “சட்டம் ஒழுங்கு சீர்குலையும் சூழல் ஏற்படும்போது போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவது வழக்கமான நடைமுறைதான். இனிமேல் யார் மீதும் வழக்குகள் பதிவு செய்யமாட்டீர்களா? சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?” என கேள்வி எழுப்பினார். அப்போது சபாநாயகர், “110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை. 2021-2026 காலகட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதில் உண்மைக்கு மாறான தகவல் எதுவும் இல்லை. போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலேயே அந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்றார். மேலும், முதலமைச்சர் விரும்பும் எந்த அறிவிப்பையும் 110 விதியின் கீழ் வெளியிடலாம் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின், “இது வரலாற்றில் முதன்முறையல்ல. திமுக ஆட்சியிலும் கூடங்குளம் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை 110 விதியின் கீழ் அறிவிக்கப்படவில்லை” என்றார்.

Comments are closed.