தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு. கடந்த மாதம் (ஆகஸ்ட்) சென்னையில் ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு – 2026’ நடைபெற்றது. முதல்வர் விஜய் தலைமையிலான இந்த மாநாட்டில் ரூ.67,452 கோடிக்கு 97 முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழகத்தை அடுத்த 10 ஆண்டுகளில் (2036) 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது தங்கள் இலக்கு என்று தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்ததிருந்தார். முதலீடுகள் மூலம் மாநிலத்தில் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகளை பெருக்குவது அரசின் திட்டம். இதற்கு முன்பாக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த முன்னாள் முதல்வர்கள்
மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். அந்த வகையில் வருகிற 10-ம் தேதி தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் விஜய் பிரிட்டன் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயணத்தில் பல்வேறு நிறுவன பிரதிநிதிகளை அவர் சந்தித்து, முதலீடுகளை ஈர்க்க உள்ளார். அவருடன் தொழில் துறை அதிகாரிகளும் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்.16-ம் தேதி வரையில் முதல்வர் விஜய்யின் பிரிட்டன் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.