ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களில் இன்று( செப்டம்பர் 1) முதல் செல்போனுக்கு தடை…!
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களின் புனித தன்மை மற்றும் ஆன்மிகச் சூழலை பாதுகாக்கும் வகையில், கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை உள்ளது. இருந்தாலும், சில கோயில்களில் புகைப்படம், வீடியோ, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் உள்ளிட்டவற்றை பக்தர்கள் பதிவு செய்வதாக புகார்கள் எழுந்தன. இதனால், செப்டம்பர் 1ம் தேதி முதல் அனைத்து திருக்கோயில்களிலும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல முழுமையாக தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக அறிவித்தது. இதன்மூலம், இன்று(01-09-2026) முதல் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அனைத்து கோயில்களிலும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோவில்,
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பதற்காக 3 கோபுர வாசல்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, 3 ஆயிரம் பெட்டகங்களில் அதிகபட்சமாக 15 ஆயிரம் செல்போன்கள் வரை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், இன்று முதல் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் செல்போன்கள் அனுமதிக்கப்படாது. இதற்காக, ஸ்ரீரங்கம் தெற்கு கோபுர வாசல், வடக்கு வாசல், கிழக்கு வாசல் என 3 இடங்களில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு கோபுர வாசல் பகுதியில் காலணிகள் பாதுகாக்குமிடம் அருகில் உள்ள கவுண்ட்டரில், வங்கி லாக்கர் போன்று 2 ஆயிரம் பெட்டகங்கள் உள்ளன. இதில், ஒரே குழுவாக வந்தால் ஒரு பெட்டகத்துக்கு 5 செல்போன்கள் வரை வைத்து கொள்ளலாம். வடக்கு, கிழக்கு வாசல்களில் தலா 500 பெட்டகங்கள் கொண்ட செல்போன் வைப்பு அறைகள் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் 3,000 பெட்டகங்களில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 15 ஆயிரம் செல்போன்கள் வரை வைக்க முடியும். இதற்காக ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும்” என்றனர்.
இதேபோல, பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார், தஞ்சையில் உள்ள புகழ்பெற்ற பெரிய கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.