நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாடி நபி பண்டிகை இன்று (26-08-2026) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள். பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர். இந்த நிலையில், மிலாடி நபி பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்! மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்! இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை,
கேரள மக்கள் அனைவரும் பாகுபாடின்றி, மிகவும் மகிழ்ச்சியோடு எதிர்நோக்கும் ஒரு திருவிழா, ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திரமான இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் திருநாளையொட்டி முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்! கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்! அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.