Rock Fort Times
Online News

ஆபாச பேச்சு: உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க, மாநில மகளிர் ஆணையத்திற்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு…!

தமிழகத்தில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான உதயநிதி, தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது நடிகை திரிஷா தொடர்பாக சர்ச்சைக்குரிய வார்த்தையை பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தவெகவினர், உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அடுத்த நாள் காலையில் சென்னையில் அவரது வீட்டில் வைத்து உதயநிதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி அன்றைய தினமே விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் உதயநிதிக்கு அடுத்த அதிர்ச்சி கொடுக்கும் வகையில், உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க, மாநில மகளிர் ஆணையத்திற்கு, தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது. அந்த வகையில், . உதயநிதியின் பேச்சு குறித்து, த.வெ.க., சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான ஆதித்ய சோழன், கடந்த 4ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தில் இணையதளம் வாயிலாக புகார்
அளித்திருந்தார்.

இந்த புகாரில் பெண்கள் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஆபாசமாக பேசியதாக வீடியோ ஆதாரங்களோடு பதிவு செய்திருந்தார். மேலும்,பெண்கள் தொடர்பாக ஆபாசமாக பேசிய உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரை விசாரித்த, தேசிய மகளிர் ஆணையம், உதயநிதி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி, தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மகளிர்
ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. எனவே மாநில மகளிர் ஆணையம் விரைவில் உதயநிதிக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்