Rock Fort Times
Online News

குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி வேட்டை: தமிழகம் முழுவதும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 11 வரை 1,577 ரவுடிகள் கைது…!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள் உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தீவிரப்படுத்தி உள்ளார். அந்தவகையில் மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரவுடிகள் மற்றும் குற்ற பின்னணி கொண்டவர்கள் என மொத்தம் 52,279 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 1,577 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இதே காலக்கட்டத்தில் பிணையில் (ஜாமீன்) வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றும் வகையில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், ரவுடிகள் மற்றும் குற்ற பின்னணி கொண்டவர்கள் என 3,288 பேர் மீதான பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றுவதற்கும், தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்வதற்கும் போலீஸார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்