“முதல்வர் விஜயின் வருகையால் அந்த சூரியனுக்கே வியர்த்து விட்டது” – அமைச்சர் வினோத்..* யாருமே நெருங்க முடியாத இடத்தில் தான் சூரியன் இருக்கிறது- ஓபிஎஸ்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(12-08-2026) தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானம் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அரசின் பதிலுரை தொடங்கியது. இதில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர் வினோத் பதில் அளித்து பேசுகையில், தி.மு.க.தலைவர் ஸ்டாலின் த.வெ.க. வேளாண் பட்ஜெட்டை வெற்று பட்ஜெட் என விமர்சித்திருந்தார். த.வெ.க.வின் வேளாண் பட்ஜெட் வெற்று பட்ஜெட் அல்ல அது விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட். வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு போதிய கால அவகாசத்தை எதிர்க்கட்சியினர் வழங்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க தொலைநோக்கு திட்டங்கள் தேவை. கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொது ரகம், சன்ன ரகம் நெல், கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்தியுள்ளார் முதலமைச்சர் விஜய். எங்கள் திட்டங்களை எதிர்க்கட்சிகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இதுவரை ஆய்வு செய்ததில் 23,399 ஹெக்டேர் பரப்பளவில் 33 சதவீதம் மேல் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைவருக்கும் சூரியனால் வியர்க்கும். நீங்கள்(விஜய்) வந்தபிறகு சூரியனுக்கே வியர்த்தது. இவ்வாறு அவர் பேசினார்.
ஓபிஎஸ் பதிலடி,
அமைச்சர் வினோத் பேசியதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்து பேசுகையில், வேளாண்துறை அமைச்சர் நீண்ட நெடிய விளக்கத்தை அளித்தார். அதனை நாங்கள் எல்லோரும் கூர்மையாக கேட்டுக்கொண்டு இருந்தோம். அவருடைய பதிலுரை முடிவில் சூரியனுக்கே வியர்த்தது என்ற கருத்தை கூறியுள்ளார். இதுவரை யாருமே நெருங்க முடியாத இடத்தில் தான் சூரியன் இருக்கிறது. எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தும் அங்கே ஏவுகணைகளை செலுத்த முடியவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.

Comments are closed.