பொய் சொல்லாமல், நேர்மையான வழியில் சென்றால் வெற்றி சாத்தியமே…* குட்டிக்கதை மூலம் விளக்கிய அமைச்சர் மரிய வில்சன்…!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலுரை வழங்கினார். அப்போது அவர் குட்டிக்கதை ஒன்றை சொன்னார். அடுத்து இந்த தேசத்தை ஆளப்போவது யார்? என்று பெரியவர் ஒருவர் போட்டி வைத்தாராம். போட்டியில் பங்கேற்க வந்த இளைஞர்களிடம் அந்த பெரியவர், ஒவ்வொருவருக்கும் ஒரு விதையை கொடுத்தார். அப்போது, நீங்கள் 3 மாதங்களுக்கு பிறகு இந்த விதையை செடியாக வளரச்செய்து வாருங்கள் என்றார். 3 மாதம் முடிந்து, இளைஞர்கள் வந்தார்கள். செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்திருந்தன. ஆனால் ஒருவர் மட்டும், ஒன்றுமே வளர முடியாத நிலையில் தொட்டியை எடுத்து வந்திருந்தார். அதை பார்த்து நிறையபேர் சிரித்தார்கள். அப்போது அந்த பெரியவர், இவர் தான் வெற்றியாளர் என்று சொன்னார். அப்போது, மற்ற இளைஞர்கள், நீங்கள் கொடுத்த விதையை செடியாக்கி பூக்கள் பூக்கும் அளவிற்கு கொண்டு வந்திருக்கிறோம் அவரை வெற்றியாளர் என்று சொல்கிறீர்களே என்று கேட்டனர். அதற்கு அந்தபெரியவர் சொன்னாராம். நான் உங்களிடத்தில் கொடுத்தது வேகவைத்த விதை. அது ஒருபோதும் முளைக்காது. வெற்றி அடைவதற்காக பொய் சொல்லாமல் நேர்மையாக வந்த
இவர்தான் வெற்றியாளர் என்று சொன்னாராம். வெற்றி அடைவதற்காகபொய் சொல்லாமல் குறுக்குவழியை கடைப்பிடிக்காமல், நேர்மையாக இருந்தால் எல்லாம் இங்கு சாத்தியம் என்பதற்கு எங்கள் தலைவரே சாட்சி இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர், மர்மயோகி திரைப்படத்தில், “குறி வைத்தால் தவற மாட்டேன், தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்” என்று எம்ஜிஆர் ஒரு வசனம் பேசி இருப்பார். அந்த வசனப்படி, சொன்னதை சாதித்து காட்டியவர் எங்கள் முதல்வர் விஜய் என்றார். அதோடு கருணை இருந்தால் வள்ளலாகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமை இருந்தால் மனிதனாகலாம் இந்த மூன்றும் இருந்தால் தலைவனாகலாம் என்று ராகத்தோடு சில வரிகள் பாடினார். அமைச்சரின் கதை, வசனம் மற்றும் பாடலை முதல்வர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் வெகுவாக ரசித்து கேட்டனர்.

Comments are closed.