Rock Fort Times
Online News

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே சாய்ந்து விழும் அபாயத்தில் மின்கம்பம்… * உயிர் பலி ஏற்படும்முன் சரிசெய்யப்படுமா?

திருச்சி மாநகரின் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத பகுதிகளில் ஒன்று சத்திரம் பேருந்து நிலையம். இதன் அருகே செயல்பட்டு வரும் இந்திரா காந்தி கல்லூரிக்கு பின்புறம் உள்ள சாலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நள்ளிரவில் அப்பகுதியில் லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று, சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு மின் கம்பத்தின் மீது மோதியது. லாரி மோதிய வேகத்தில் மின் கம்பமானது வளைந்து பலத்த சேதத்திற்குள்ளானது. இதனால் அப்பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்களும், அதிகாரிகளும் உடைந்த மின் கம்பத்தை பார்வையிட்டதோடு, விபத்து ஏற்படுத்திய லாரி நிறுவனத்திற்கு மின் கம்பத்தை சரி செய்வதற்காக ரூ. 2 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். ஆனால், மின் கம்பத்தை சரி செய்வதற்காக அபராதம் பெறப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் அந்த மின் கம்பம் சரி செய்யப்படாமல் உள்ளது. இப்பகுதியை சுற்றி வணிக நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும், உள்ளது. இங்கிருந்து த்ரீ பேஸ் பவர் சப்ளை செய்யப்படுவதாலும், சேதமடைந்துள்ள இரும்பு கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்ட் காங்கிரீட் பூச்சுகளும் பெயர்ந்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பமானது கீழே விழலாம் என்கிற அபாயமான சூழல் உள்ளது.பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்திவரும் இந்த சாலையில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்றித்தருமாறு மின்வாரிய அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுகுறித்து எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மின்கம்பம் சேதமானபோது அபராதம் விதிப்பதில் காட்டிய ஆர்வத்தை, அதை சரிசெய்வதிலும் காட்ட வேண்டும். மின்கம்பம் சரிந்து விழுந்து அப்பாவி மக்களின் உயிர்பலி ஏற்படுவதற்கு முன், இம்மின்கம்பத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்