டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் ஊழியர் மீது எஃப்.ஐ.ஆர்…* நீதிமன்றம் அதிரடி..!
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் மூலம் அரசுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்தநிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் விலையை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்குபவர்களின் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது கொடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று( ஆகஸ்ட் 7) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மது வாங்குவோரின் கூட்டம் அதிகமாக இருப்பதால் ரசீது வழங்குவதில் சிரமங்கள் இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நேற்று கூட மது வாங்கிய போது ரசீது வழங்கப்படவில்லை என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மாநிலத்துக்கு பெரும் வருவாயை தரும் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது எனவும், கூட்டத்தை முறைப்படுத்த ஏன் காவலர்களை பணியமர்த்தக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், மது வாங்குவோர் கூடுதல் தொகையை கொடுக்க கூடாது எனவும், அவர்கள் கொடுப்பதால் தான் கடை பணியாளர்கள் கேட்கின்றனர் எனவும் குறிப்பிட்ட நீதிபதி, அரசு சுற்றறிக்கையை பின்பற்றாமல், கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது போலீசிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகார்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் காவலர்களை பணியமர்த்த, உள்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர் அளித்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து
அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

Comments are closed.