Rock Fort Times
Online News

திருச்சி, தென்னூரில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை மீட்க வேண்டும்…* மாநகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு…!

திருச்சி, தென்னூர், அண்ணாமலை புரத்தைச் சேர்ந்த ரஞ்சித்சிங், ஆபிரகாம், மோசஸ், பி.ஏ. சின்னையா, எம்.எபன் ஸ்டெல்லா பாய் உள்ளிட்டோர் திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், நாங்கள்
திருச்சி, தென்னூர் அண்ணாமலை புரம் ‘ராஜு பிளாட்ஸ்’ அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறோம். எங்கள் கட்டிடத்திற்கு ஒரு நுழைவுப் பாதை உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின்படி, இந்த சாலை தில்லைநகர் 11வது குறுக்குத் தெரு மேற்கு விஸ்தரிப்பின் தொடர்ச்சியாகும். எங்கள் கட்டிடத்திற்குச் செல்லும் மாநகராட்சிக்குச் சொந்தமான சாலையை தில்லை நகரை சேர்ந்த இரு குடும்பத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இதன் காரணமாக எங்கள் கட்டிடத்திற்குள் நுழைய இந்த சாலையைப் பயன்படுத்த முடியவில்லை. மாற்றாக, அண்ணாமலை புரத்தின் குறுகிய தெரு சாலையைப் பயன்படுத்து கிறோம். எங்கள் கட்டிடத்திற்கு செல்லும் மாநகராட்சிக்குச் சொந்தமான சாலையின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டால் குடியிருப்பாளர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் எளிதாக செல்ல முடியும். இதை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இதுகுறித்து குடியிருப்பு மக்கள் கூறுகையில், இந்த ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து நாங்கள் ஏற்கனவே கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு “இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்” என்று பிளக்ஸ் போர்டு வைத்து விட்டு சென்றுள்ளனர். இந்த இடம் பொது போக்குவரத்துக்கு சொந்தமான இடம் என அரசின் அனைத்து ஆவணங்களும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை போலீஸ் பாதுகாப்புடன் நிரந்தரமாக அகற்றி தர வேண்டுகிறோம். அந்த மீட்பு இடத்தை வேறு பணிகளுக்கு பயன்படுத்தாமல் சாலையாகவே பயன்படுத்த வேண்டுகிறோம் என்று கூறினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்