காவிரி விவகாரத்தில் தவெக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து தஞ்சையில் ஆகஸ்ட் 3-ல் திமுக ஆர்ப்பாட்டம்…!* உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது..!
விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் ஆகஸ்ட் 3-ம் தேதி காலை 10 மணியளவில் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதல்வர். தேர்தலுக்கு முன்பு, “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்” என தவெக தெரிவித்தது. தேர்தலுக்குப் பின்பு 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி என்ற வெற்று அறிவிப்பை வெளியிட்டு, அதன்காரணமாக விவசாயிகள் வெகுண்டெழுந்து தற்போது வரை போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால், 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. மேகதாது அணை கட்ட கடைமடை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் பேசியுள்ளார். அணையைக் கட்டியே தீருவோம் எனவும், தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை எனவும் கர்நாடக முதல்வர் பேசி வருகிறார். இதற்கு மாறாக, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மவுனம் காத்து வருகிறார். காவிரியில் நமக்கு உரிய பங்கினை வழங்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும், அதனை நிறைவேற்ற முடியாது என்று கர்நாடக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு முதல்வர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்.
கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்து சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 1.5 லட்சம் ஏக்கர் சாகுபடி மட்டுமே நடப்பதாகச் செய்திகள் வருகிறது. இப்படி, விவசாயப் பெருமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் வருகிற 03-08-2026 அன்று காலை 10 மணியளவில், தஞ்சாவூர், பனகல் கட்டடம் அருகில் கழக இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தி.மு.க. முடிவெடுத்துள்ளது. இப்போராட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.