நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் கடந்த இருபதாம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். இதை போலீசார் தடுத்து நிறுத்திய போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை, பெல்லட் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் இரு தரப்பிலும் பலருக்கு காயம் ஏற்பட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், காயமடைந்த போலீசார் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சூரியகாந்த், நீதிபதிகள் ஜோய்மாலியா பாக்சி, மோகனா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசாரின் தடியடி நடவடிக்கைகளுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். போராட்டத்தில் வரம்பு மீறல் நடந்திருந்தால் அது சுதந்திரமாக விசாரிக்கப்பட வேண்டும், போராட்டம் நடக்கிறது என்பதற்காக மட்டுமே தடியடி நடத்த வேண்டும் என்பது அர்த்தமல்ல என கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை இன்றைக்கு (28-07-2026) தள்ளி வைத்தனர். அதன்படி, மாணவர்கள் போராட்ட வழக்கு மீதான விசாரணை இன்றும் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி சூரியகாந்த், மாணவர்கள் போராடுவதற்கு அனைத்து அரசியல் சாசன உரிமையும் உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். கிரிமினல் குற்றப் பின்னணி இல்லாத நபர்கள் யாராவது சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் விடுவிக்க வேண்டும். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மீது எந்தவிதமான கடுமையான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. போராட்டம் நடைபெற்ற மராட்டியம், பீகார், உத்தரபிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வன்முறை சிசிடிவி காட்சிகள், வீடியோ பதிவுகள் என அனைத்து ஆதாரங்களையும் பத்திரமாக வைக்க வேண்டும். தேவைப்படும்போது நீதிமன்றத்தில் அதை சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் போராட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த ஆழமான விரிவான விசாரணை நடத்த வேண்டும். சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடுகிறேன் என்ற தலைமை நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Comments are closed.