தூத்துக்குடி அமுதா நகர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 24). சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக கூறி கடந்த 17ம் தேதி, அருணாச்சலத்தை போலீசார் கைது செய்து தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தயார் செய்து கொண்டிருந்த போது, மயங்கி விழுந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது தலையில் காயம் ஏற்பட உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், அங்கு சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் உயிரிழந்தார். போலீஸ் நிலையத்தில் அருணாச்சலத்தை தாக்கியதே அவரது மரணத்துக்கு காரணம் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும், நீதித்துறை நடுவர் முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். அதன்படி, இன்று(24-07-2026) காலை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து அருணாசலத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரது உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள், அருணாச்சலத்தை தாக்கிய 4 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Comments are closed.