Rock Fort Times
Online News

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு… காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசியபோது, முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாகக் கூறி, விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து, தன்னை நீதிமன்றக் காவலில் அடைத்த உத்தரவை ரத்து செய்யவும், ஜாமீன் வழங்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அவசர வழக்காக விசாரித்தார். அப்போது, மார்க்கண்டேயன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் வழங்காமல் நேரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதால் நீதிமன்றக் காவல் உத்தரவை ரத்து செய்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்