டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து நேற்று (ஜூலை 21)நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார். மேலும், டெல்லியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று(ஜூலை 22) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு குறித்து தனது கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய முதலமைச்சர் விஜய், “நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் கடுமையாக பாதிக்கும் நீட் தேர்வை வைத்து அரசியல் லாபத்திற்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு நிரந்தரத் தீர்வாக கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர், அதில் சட்டரீதியான சிக்கல்கள் இருந்தால், இடைக்காலத் தீர்வாக ‘சிறப்பு ஒருங்கிணைந்த பட்டியல்’ உருவாக்கி, கல்வி மற்றும் மருத்துவக் கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தக் கோரிக்கையை தங்கள் கட்சி தொடங்கப்பட்ட காலத்திலேயே நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் வலியுறுத்தியதாகவும், மக்களின் மற்றும் மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதித்து, நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதே ஒரே தீர்வு என்றும் முதலமைச்சர் விஜய் தனது பதிவில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.