திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபம் பிரசித்தி பெற்ற இடம். இங்கு தினம்தோறும் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி விட்டு செல்வது வழக்கம். மேலும், முக்கிய நாட்களான ஆடி, புரட்டாசி, தை உள்ளிட்ட மாதங்களில் வரக்கூடிய அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. அதனை செய்து கொடுக்கக்கூடிய புரோகிதர்கள் 200க்கும் மேற்பட்டோர் இங்குள்ள மண்டபம், படித்துறை மற்றும் அம்மா மண்டபத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அமர்ந்து திதி உள்ளிட்ட முன்னோர் வழிபாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகமானது, திடீரென அம்மா மண்டபம் மற்றும் படித்துறை சுற்றியுள்ள பகுதிகளில் கோவிலுக்கு சொந்தமான இடம்
உள்ளதாகவும், அதற்கான அளவீடுகள் செய்யப்பட்டு கற்கள் நட உள்ளதாகவும் கூறி அளவை கற்களை கொண்டு வந்து மண்டபத்தில் வைத்துள்ளனர். இது புரோகிதர்களுக்கு பெரும் இடைஞ்சலை ஏற்படுத்துவதாகவும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கோவில் நிர்வாகம் எடுத்த இந்த திடீர் நடவடிக்கையை கண்டித்தும், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மறியலில் ஈடுபட்ட புரோகிதர்களிடம் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் எதற்கும் உடன்படாததால் போலீசார் குண்டு கட்டாக புரோகிதர்களை தூக்கிச் வேனில் ஏற்றி சென்றனர்.

Comments are closed.