Rock Fort Times
Online News

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மணப்பாறை த.வெ.க.சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அன்னதானம்…!

முன்னாள் முதலமைச்சர், மறைந்த காமராஜரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று மணப்பாறை – கோவில்பட்டி சாலையில் அமைந்துள்ள காமராஜர் முழு உருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளரும், மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.கதிரவன்
தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் கதிரவன் எம் எல் ஏ வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், அவரது ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புறங்களிலும் கல்வி சென்றடைய பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்வி மட்டுமல்லாமல், தமிழகத்தின் வளர்ச்சிக்காக அணைகள், தொழிற்சாலைகள், சாலைகள், மின் உற்பத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி தொழில்துறை மற்றும் வேளாண் முன்னேற்றத்திற்கும் அடித்தளம் அமைத்தவர் காமராஜர். அதிகாரத்தில் இருந்தபோதும் ஆடம்பர வாழ்க்கையைத் தவிர்த்து, இறுதி வரை மக்களோடு மக்களாக வாழ்ந்த தலைவர் என்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, விவசாய அணி அமைப்பாளர் மாயவன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ், மணப்பாறை வடக்கு நகரக் கழகச் செயலாளர் கே.சி. திருப்பதி, தெற்கு நகரக் கழகச் செயலாளர் அழகர், ஒன்றியச் செயலாளர்கள் பாண்டியன், பார்த்திபன், வெள்ளைச்சாமி, காயாம்பு, வையம்பட்டி சரவணன், ஒன்றிய செயலாளர் மருங்காபுரி சேகர், வழக்கறிஞர் அணி பிர.பாண்டியன், த.வெ.க.நிர்வாகி அன்பரசன், நகராட்சி கவுன்சிலர்கள் ராஜா, எத்திராஜ், ஆர்பர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு காமராஜருக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்