Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் த.வெ.க.சார்பில் ஜான் ஆரோக்கியசாமி போட்டி?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். தேர்தல் விதிமுறைகளின்படி இரு தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், அந்த தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதியில் யாரை வேட்பாளராக முதல்வர் விஜய் நிறுத்தப் போகிறார் என்ற பேச்சு பரவலாக அடிபட்டு வருகிறது. ஐஏஎஸ் முன்னாள் அதிகாரி சகாயம், அதிமுக முன்னாள் அமைச்சரும், த.வெ.க. சார்பில் லால்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வருமான கு.ப. கிருஷ்ணன் மகன் சிரஞ்சீவி, விஜய் ரசிகர் நற்பணி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.கே.ராஜா, மலைக்கோட்டை பகுதி தவெக செயலாளர் என்ஜினியர் சதிஷ் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டன.

இந்தநிலையில் முதலமைச்சர் விஜய் தன்னுடன் நீண்ட காலமாக பயணித்தவர்களுக்கு, விசுவாசமிக்க நபர்களுக்கு பதவிகள், பொறுப்புகள் கொடுத்து அழகு பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அந்தவகையில், தவெக ஆட்சியை பிடிப்பதில் முக்கிய மூளையாக செயல்பட்ட தேர்தல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமிக்கு முக்கியத்துவம் கொடுக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகவும், அவரை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றி பெற செய்து அமைச்சராக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014ம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய அரசியலில் தேர்தல் வியூக நிறுவனங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தன. தமிழகத்தில் பிரசாந்த் கிஷோர், சுனில் போன்ற முன்னணி வியூக வகுப்பாளர்கள் வரிசையில், தற்போது ‘தமிழக வெற்றிக் கழகம்’ மூலம் பெரும் கவனம் ஈர்த்திருப்பவர் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை பூர்விகமாக கொண்ட இவர் பாலக்கரை, இருதயபுரம் பகுதியை சேர்ந்தவராம். மேலும் ஜான் ஆரோக்கியசாமி பல வெளிநாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளை பிரபலப்படுத்தும் பணியில் இருந்தவர். எம்.ஏ ஆங்கிலம் மற்றும் எம்.பி.ஏ படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்