திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தியாகி அருணாச்சல மன்றத்தில் இன்று( ஜூலை 8) நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல். ரெக்ஸ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஜூலை 15 அன்று வரவிருக்கும் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது, உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தங்கள் பகுதிகளில் எப்படி கட்சிப்பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டன. இக்கூட்டத்தில் பேசிய திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல்.ரெக்ஸ், சமீபத்தில் சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையிலான மாவட்ட கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்ட தலைவர்களும் கட்சி வளர்ச்சி தொடர்பான தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினர். அப்போது,நாம் அங்கம் வகிக்கிற தமிழக வெற்றிக்கழகத்தில் பல்வேறு வாரிய பதவிகள் காலியிடங்களாக இருக்கிறது. அதில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் பங்கு கேட்பது தொடர்பான எனது கருத்துக்களை முன் வைத்தேன். அதேபோல மாவட்டங்கள் தோறும் நிரப்பப்படும் அரசு வழக்கறிஞர் பதவியையும், காங்கிரஸ் கட்சியினருக்கு பெற்று தருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக பேசினார்.
இதையடுத்து பேசிய கட்சி நிர்வாகிகளும், மாவட்டத் தலைவர் ரெக்ஸின் கருத்தையே வழி மொழிந்தனர். தமிழகத்தில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ஆகிய இருவருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வாரிய பதவி, அரசு வழக்கறிஞர் பதவி உள்ளிட்டவற்றிலும் காங்கிரஸ் கட்சி பங்கு கேட்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Comments are closed.