சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸார், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவில், காவல்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், செந்தில்பாலாஜியும் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று( ஜூலை 8) விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், த.வெ.க ஆட்சியை கவிழ்க்க முயற்சி என்பது எம்எல்ஏ இளையராஜாவின் கற்பனையாகும். அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டவர். செந்தில்பாலாஜி சபாநாயகருக்கு எதிராக ஏன் செயல்பட வேண்டும்?. குதிரை பேரம் நடைபெற்றதாக நிரூபிக்கும் உறுதியான ஆதாரம் எங்கே? தொலைபேசி உரையாடல் பதிவுகள் மட்டுமே ஆதாரமாக கருத முடியாது. 35 கோடி பேரம் என்ற குற்றச்சாட்டு வெறும் யூகத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு, அசோக்குமார் ஒரே நாளில் ஈரோட்டில் இருந்தது ஒரு ஆதாரமா? 59 எம்எல்ஏக்களை கொண்ட திமுகவால் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்? உண்மையில் இந்த வழக்கை போலீசார்தான் பெரிதாக்கி வருகின்றனர். விசாரணைக்கு ஒத்துழைக்க செந்தில் பாலாஜி தயாராக உள்ளார் என்றார். இதனையடுத்து திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.