நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக எப்படியும் ஆட்சியை பிடித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியையே சந்தித்தது. முதல் முறையாக போட்டியிட்ட விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்தது. திமுக இரண்டாவது இடத்தை பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால், அதிமுகவோ மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த தவறான முடிவுகளும், கூட்டணியை சரியாக அமைக்காதது தான் காரணம் என்று கட்சி நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இதில் ஒரு சாரார் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். அதனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்த ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்தவகையில் இன்று(07-07-2026) சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், அந்த மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம். சுகுமார், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி.வீரமணி ஆகியோர்பங்கேற்கவில்லை. அவர்கள் என்ன காரணத்திற்காக கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை. அவர்கள் இருவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.