Rock Fort Times
Online News

த.வெ.க.வில் ஐக்கியம் திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த எம்.பி., மகன்.. * யார் இந்த சந்தீப் ஆனந்த்!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக மற்றும் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளும் தோல்வியை தழுவின. முதல் முறையாக தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்- அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்று திறம்பட பணியாற்றி வருகிறார். இனி அதிமுகவில் எதிர்காலம் இருக்காது என்று கருதிய முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். ஆனால், திமுகவை பொறுத்தவரை முக்கிய புள்ளிகள் யாரும் த.வெ.க. பக்கம் செல்லவில்லை. ஆனால், இன்றைய தினம்(04-07-2026)  திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்து திமுகவிற்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். சென்னை, பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

யார் இவர்?

சிறந்த பேச்சாளரான ஜெகத்ரட்சகனுக்கு திமுக தலைமை எப்போதுமே எம்பி சீட்டு வழங்கிவிடும். அந்தவகையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது மகன் சந்தீப் ஆனந்த். மிகப்பெரிய மதுபான ஆலையான அக்கார்ட் டிஸ்டில்லரீஸ் அண்ட் புரூவரீஸ் பிரைவேட் லிமிடெட் இவர்களுக்கு சொந்தமானது தான். இந்த மதுபான ஆலையிலிருந்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பெருமளவில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. மதுபான ஆலைக்கு ஏதாவது ‘சிக்கல்’ ஏற்பட்டு விடும் என்ற எண்ணத்தில் அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும், அவர் கட்சியில் மாநில இளைஞரணி தலைவர் பதவியை குறிவைத்து சேர்ந்ததாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்தே தீருவேன் என்ற முழக்கத்துடன், முதலமைச்சர் விஜய் ஆட்சி பொறுப்பேற்றுள்ளார். ஒரு மதுபான தொழிற்சாலையை வைத்திருக்கும் சந்தீப் ஆனந்தை எப்படி கட்சியில் சேர்த்தார் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்