Rock Fort Times
Online News

த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.வுக்கு ரூ.35 கோடி பேரம்: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ‘வலை’…!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏவாக பதவி வகித்து வருபவர் டாக்டர் என். இளையராஜா. இவரை IPDS என்ற கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் திருநாவுக்கரசு மற்றும் சிலர் அணுகி ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர் அனுப்பியதாகவும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தாங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இளையராஜா, இதுகுறித்து கடந்த 29.06.2026 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அந்த புகாரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது ஊழியரான தன்னிடம் தனது மக்கள் பணியை செய்யக் கூடாது என்பதற்காகவும், தனது பேச்சுக்கு உடன்பட லஞ்சம் தர முயற்சித்ததோடு தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்புலமாக செயல்படும் நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். அப்புகாரின் பேரில், D1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதுகுறித்து நடத்தப்பட்ட புலன் விசாரணையின் அடிப்படையில் பணப்பேர சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்னணியாகச் செயல்பட்ட திருச்சியை சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திமுக முன்னாள் அமைச்சரும். தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜியின் சகோதரர் வி. அசோக்குமார், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட எதிரி நரேஷை சென்னையில் சந்தித்ததும், செந்தில்பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின் பேரிலேயே திருநாவுக்கரசு சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை தொடர்பு கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தில் பாலாஜிக்கு வலை,

இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் தனிப்படைக் காவல்துறையினர் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கரூரில் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சென்னையைச் சேர்ந்த தனிப்படைக் காவல்துறையினர் சோதனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல அவரது தம்பி வி.அசோக் குமாரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்