திமுகவுடன், அதிமுக எப்படி கை கோர்க்க முடியும்: இப்படி ஒரு எண்ணம் வரலாமா? கட்சியில் இருந்து விலகிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பு அறிக்கை..!
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர். கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் அதிமுகவில் இருந்தும் தான் விலகுவதாக இன்று(30-06-2026) அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் லட்சியப் பாதையிலும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பேரன்பிலும் என் அரசியல் பயணத்தை தொடங்கியவன் நான். பதவிக்காகவோ. சுயநலத்திற்காகவோ இந்த இயக்கத்திற்குள் வந்தவன் அல்ல. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் இந்த இயக்கம் சந்தித்த சோதனைகள் அத்தனையும் நீங்கள் அறிவீர்கள். அத்தனை நெருக்கடி நேரங்களிலும், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியின் பின்னால் உறுதியாக நின்றவன் இந்த விஜயபாஸ்கர்.
கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் என் மீது 43 பொய் வழக்குகள்
சுமத்தப்பட்டன. தொண்டர்கள் மற்றும் என் குடும்பத்தினர் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பாய்ந்தன. குடும்பத்தின் நிம்மதி போனது. கரூரில் செந்தில்பாலாஜியின் அதிகார மமதையை எதிர்த்து மீண்டும் அதிமுக கொடியை ஏற்றினேன். இத்தனை தியாகங்களுக்கும், நான் சுமந்த வேதனைகளுக்கும் இன்று பரிசாக எனது நெஞ்சில் ஈட்டி பாய்ந்துள்ளது. தீய சக்திகளுடன் கைகோர்த்து அவர்களின் தயவில் ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதை கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. நமக்கு இப்படி ஒருஎண்ணம் வரலாமா? தீயசக்தி என ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட திமுகவுடன், அதிமுக எப்படி கை கோர்க்க முடியும். எங்களின் அத்தனை எதிர்ப்புகளையும், தொண்டர்களின் தார்மீக உணர்வுகளையும் துச்சமாக மதித்து நீங்கள் எடுத்த அந்தத் தன்னிச்சையான முடிவுதான் இன்று இயக்கத்தை அழிவிலும் வேதனைனயிலும் நிறுத்தி உள்ளது. இந்த நிலைப்பாட்டிற்கு பலியாக நானும், என்னுடன் பயணித்தவர்களும் தயாராக இல்லை. கட்சியில் இருந்து மீளா கண்ணீருடனும், மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Comments are closed.