Rock Fort Times
Online News

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டணம் ரூ. 5,000-ஆக உயர்வு; பக்தர்கள் அதிர்ச்சி…!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்தக் கோயில், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வரும் நிலையில், இங்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் வருகை தருகின்றனர். மேலும், திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சேவைக் கட்டணங்கள் மற்றும் சிறப்பு தரிசன கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தங்க ரத உலா திட்டத்திற்கு 2,500 ரூபாயில் இருந்து 5,000 என உயர்த்தவும், அதற்கான நிரந்தர வைப்பு நிதியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து, ரூ.ஒரு லட்சமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் சண்முக அர்ச்சனை, 5 ஆயிரம் ரூபாயில் இருந்து, 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மூலவர் அபிஷேகத்திற்கு 1,500 ரூபாய் வாங்கிய இடத்தில், இரண்டு நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெற திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அபிஷேக தரிசன கட்டணம் சாதாரண நாட்களில் 500 ரூபாயும், விழா நாட்களில் 2 ஆயிரமும் இருந்ததை, அனைத்து நாட்களிலும் 2,500 ரூபாய் என உயர்த்தப்பட உள்ளது. திருச்செந்தூர் கோயிலின் வருவாய் குறைந்துள்ளதால், இந்த கட்டண உயர்வை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பில் மக்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்தால் வருகிற ஜூலை 7ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்