Rock Fort Times
Online News

18 நாளில் ரூ.1 கோடிக்கு இலவச மருத்துவம்… * வைரலாகும் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவனின் பேஸ்புக் பதிவு!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.கதிரவன்.
2026 சட்டசபை தேர்தலில், தமிழகம் முழுக்க மையமிட்ட விஜயின் விசில் புரட்சி, மண்ணச்சநல்லூர் தொகுதியில் மட்டும் “சைலண்ட்” ஆனது. தேர்தலின் தொடக்கத்திலிருந்தே தனக்கு ஆதரவாக வேட்புமனு தாக்கல் செய்த 53 பேருக்கு வெளிநாடு சுற்றுலா, தேர்தல் சமயத்தில் வழக்குகளை எதிர்கொண்டவர்களுக்கு நிதி உதவி, திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு ஸ்கார்பியோ கார் என திமுக வேட்பாளராக களம் கண்ட கதிரவன் சலுகைகளை வாரி வழங்கினார். மேலும் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட இரண்டு ஒன்றியங்களுக்கும் டாடா கிடாச்சி, கிராமங்கள்தோறும் ஆர்.ஓ.பிளாண்ட் அமைத்துத்தருவேன் என ஏராளமான வாக்குறுதிகளையும் இவர் வாரி வழங்கினார். மேலும், தான் எம்.எல்.ஏவாக இருக்கும் வரை தனக்கு சொந்தமான சமயபுரம் சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவச மருத்துவம் தொடரும் எனவும் பேசினார். ஏற்கெனவே எம்.எல்.ஏ கதிரவனின் இலவச மருத்துவத்தால் பயனடைந்த தொகுதி மக்கள், தேர்தலில் இரண்டாவது முறையாகவும் உதயசூரியனுக்கு வாக்களித்து கதிரவனை சுமார் 12 ஆயிரத்து 364 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர். இந்நிலையில், எம்.எல்.ஏவாக பொறுப்பேற்ற பிறகு மே.12லிருந்து 31ம் தேதிவரை இடைப்பட்ட இந்த 18 நாட்களில் மட்டும் சுமார் ரூ.1 கோடிக்கும் அதிகமாக தனது சொந்த செலவில் தொகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்ததாக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து எம்.எல்.ஏ தரப்பிடம் நாம் பேசியபோது.,”

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வரைதான் கதிரவன் இலவச மருத்துவம் கொடுப்பார். அவர் இலவசமாக ட்ரீட்மெண்ட் கொடுத்து வருவதாக சொல்வதெல்லாம் பொய்.காப்பீடு நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் சிகிச்சைகளுக்கு மறைமுகமாக பணம் பெற்று கொள்கிறார் என்றெல்லாம் பலவகையான பொய்யான விமர்சனங்களை எதிர்கட்சியினர் பரப்பி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் எது உண்மை? எது பொய்? உண்மையாகவே தற்போதும் எம்.எல்.ஏவின் இலவச மருத்துவம் தொடர்கிறதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். இது அனைத்திற்கும் தற்போது வெளியிடப்பட்டுள்ள இலவச மருத்துவ சிகிச்சை தொடர்பான பதிவில் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பூத் வாரியாக ஒவ்வொரு நாளும் பயன்பெற்றவர்கள் எத்தனை பேர்?, அவர்களுக்கான மருத்துவமனை கட்டணம்? காப்பீட்டு தொகையாக க்ளைம் செய்யப்பட்டது எவ்வளவு? எம்.எல்.ஏ சொந்த பணத்தில் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது? என விளக்கமாக பதிவிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மே மாதம் 12ம் தேதியிலிருந்து 31ம் தேதிவரை மட்டும் ரூ.1 கோடியே 1 லட்சத்து 94 ஆயிரத்து 839 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், “தான் எப்போதும் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கானவன்” என்பதை தனது செயலால் எம்.எல்.ஏ கதிரவன் நிரூபித்துள்ளார்” என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்