Rock Fort Times
Online News

184 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு இருபாலர் அந்தஸ்து வழங்கியது தமிழக அரசு…!

சென்னையில் உள்ள மிகப் பழமையான, புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான பச்சையப்பன் ஆடவர் கல்லூரி, நடப்பாண்டு முதல் இருபாலர் அரசு கலை அறிவியல் கல்லூரியாக செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் ஆடவர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதே சமயம், இருபாலர் கல்லூரிகளில் சேர மாணவர், மாணவியர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை நந்தனத்தில் இயங்கி வந்த ஆடவர் கல்லூரியானது சில ஆண்டுகளுக்கு முன்பு இருபாலர் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரையில் அமைந்துள்ள 184 ஆண்டுகால பழமை வாய்ந்த பச்சையப்பன் கல்லூரிக்கும் தமிழ்நாடு அரசானது இருபாலர் கல்லூரி என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது. இருபாலர் அந்தஸ்து குறித்த பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர் பேபி குல்னாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“1842 ம் ஆண்டு நிறுவப்பட்ட பச்சையப்பன் கல்லூரி, பல தலைமுறைகளாக கல்விச் சிறப்பு, சமூகப் பொறுப்பு மற்றும் கல்விச் சேவையின் அடையாளமாக விளங்கி வருகிறது. இருபாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது, கல்லூரியின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளதுடன், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, சமத்துவம் மற்றும் சமுதாயத்தின் வளர்ந்து வரும் கல்வி எதிர்பார்ப்புகளுக்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, மாணவிகளுக்கும் இந்நிறுவனத்தின் மூலமாக, தரமான உயர் கல்விக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பன்முகத்தன்மையும் உயிர்ப்பும் நிறைந்த கல்விச் சூழலை உருவாக்கும். தமிழ்நாடு அரசின் இந்த முடிவை, பச்சையப்பன் கல்லூரியின் நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் வரவேற்றுள்ளனர். கல்லூரியின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் அங்கீகரித்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அனுமதியை வழங்கிய தமிழ்நாடு அரசு மற்றும் உயர்கல்வித் துறைக்கு கல்லூரி தனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.
இருபாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது ஒரு நிர்வாகச் சாதனை மட்டுமல்ல; மாறாக, இரண்டு நூற்றாண்டுகளாக சமூகத்திற்கு சிறப்பாகச் சேவை செய்துவரும் இந்தப் பெருமைமிகு கல்வி நிறுவனத்தின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தியபடி, முன்னேற்றமிக்க எதிர்காலத்தை உருவாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்